×

44 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி: குல்தீப் அபார பந்துவீச்சு

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 44 ரன் வித்தியாசத்தில் வென்றது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். டெல்லி தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, வார்னர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 93 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர்.

பிரித்வி 51 ரன் (29 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வருண் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து, வார்னர் - கேப்டன் பன்ட் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தனர். பன்ட் 27 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), லலித் யாதவ் 1 ரன், ரோவ்மன் பாவெல் 8 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். வார்னர் 61 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி உமேஷ் வேகத்தில் ரகானே வசம் பிடிபட்டார்.

கடைசி கட்ட ஓவர்களில் அக்சர் - ஷர்துல் ஜோடி வெளுத்து வாங்க, டெல்லி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது. அக்சர் படேல் 22 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஷர்துல் 29 ரன்னுடன் (11 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் சுனில் நரைன் 2, உமேஷ், வருண், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ரகானே, வெங்கடேஷ் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

வெங்கடேஷ் 18, கானே 8 ரன் எடுத்து கலீல் அகமது பந்துவீச்சில் வெளியேற, கேகேஆர் தடுமாறியது. இந்நிலையில், கேப்டன் ஷ்ரேயாஸ் - ராணா இணைந்து 3வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ராணா 30 ரன் (20 பந்து, 3 சிக்சர்), ஷ்ரேயாஸ் 54 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். சாம் பில்லிங்ஸ் 15 ரன் எடுத்து கலீல் வேகத்தில் லலித் வசம் பிடிபட்டார்.

குல்தீப் யாதவ் வீசிய 16வது ஓவரில் பேட் கம்மின்ஸ் (4), சுனில் நரைன் (4), உமேஷ் யாதவ் (0) விக்கெட்டை பறிகொடுக்க, கொல்கத்தா அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. ரஸ்ஸல் 24 ரன், ரசிக் சலாம் 7 ரன்னில் வெளியேற, கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வருண் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் 4 ஓவரில் 35 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கலீல் அகமது 3, ஷர்துல் 2, லலித் 1 விக்கெட் வீழ்த்தினர். டெல்லி அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Tags : New Delhi ,Kuldeep Apara ,Kolkata , Run, Kolkata, Delhi, Kuldeep, Bowling
× RELATED சூப்பர் மேன் சுனில் நரைன்! ஷாருக் பாராட்டு